பாரதியார் மிகவும் பெருமை மிக்க தமிழ் மண்ணுக்கு மட்டும் அல்லாமல் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தேச விடுதலை போராட்ட வீரர் மட்டும் இளைஞர்களின் உணர்வில் தேசம் என்னும் உணர்வை ஊட்டியவர். அவரின் உணர்ச்சி மிக்க சில கவிதைகளை நான் இங்கே பதிவிட்டுள்ளேன் படித்து பயன்பெறுங்கள்.
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
"சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று"
"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே."
"சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ"